திங்கள், 20 அக்டோபர், 2008

சினிமா . . .

சினிமா குறித்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த, என் அபிமான எழுத்துச்சிற்பி(அண்ணே, இந்த பட்டம் உங்களுக்கு தான் !) தாமிரா அவர்களுக்கு நன்றி !


ஓகே, ஸ்டார்ட் மீசிக்....

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சுமார் 3 வயது இருக்கும். ஒரு ரஜினி படம் தான் நான் பார்த்த முதல் சினிமா. படம் பேரு ”அடுத்த வாரிசு”னு நினைக்கறேன். தலைவர் ஒரு ஈட்டி சண்டை போடுவார், அதை பார்த்து தான் நான் ரஜினி ரசிகன் ஆனேன். அப்பல்லாம் தலைவர “அய்யாரு”னு கூப்பிடுவேன். அது ஒரு மந்திரச்சொல்.. அப்புரம் எந்த ரஜினி படம் பார்த்துட்டு வந்தாலும் அந்த படத்துல தலைவர் பேர என்னக்கு நானே வச்சுகிட்டு ஸ்டைல் பண்ணிட்டு இருப்பேன். ஒரு தடவை ரஜினி மாதிரியே பல்டி அடிக்கலாம்னு ஒரு இரும்பு ஸ்டூல்ல கை ஊன்றி பல்டி அடிச்சேன்.. பல்டி நல்லதான் அடிச்சேன், ஆனால் கொஞ்சம் ஸ்லிப் ஆகி, நெத்தில(நெற்றி) காயமாகிடுச்சி. 3/4 தையல் போட்டங்கனு நெனைக்கறேன். இப்போ கூட அந்த தழும்பு இருக்கு.. ஆனா ரஜினி ஸ்டைல் பண்ணறத விடுல... ஹி ஹி...

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
”யாரடி நீ மோகினி” - இந்த படத்தவிட ஒரிஜினல் ”ஆடவரி மாட்டலக்கு அர்த்தாலே வேறுலே” தான் பெஸ்ட்.  தமிழ்நாட்டிலிருந்து ஜெர்மனி வந்து 6 மாசமாகுது. இல்லன்னா லேட்டஸ்ட் ரிலீஸ் படமெல்லாம் பார்த்திருப்பேன். ஊருக்கு வந்தவொடனே சும்மா ரவுண்டு கட்டி படம் பார்க்கப் போறேன்..

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
”சரோஜா” - காமெடி த்ரில்லர். லாஜிக் நிறைய யோசிக்காமல் பார்த்தால் இது ஒரு நல்ல படம் தான்.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
”தவமாய் தவமிருந்து” - இந்த படம் பார்க்கும் போதே நிறைய அழுதிட்டேன். இந்த படத்தோட தாக்கம் ரொம்ப நாள் மனசுல இருந்திச்சு.  அதேபோல சின்ன வயசுல, அஞ்சலி படம் பார்த்துட்டு ரொம்பவே அழுதிட்டேன். அந்நியன், முதல்வன், இந்தியன், ரமணா போன்ற படங்களின் தாக்கம் எப்பவம் மனசில இருக்குது. படங்கள் பார்த்து என்னோட சுபாவங்கள், பழக்கவழக்கம் எல்லாம் கொஞ்சம் மாற்றிக்கொண்டதுகூட உண்டு.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா ரிலீஸ் நேரத்தில் நடந்த சம்பவங்கள்.

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறைய... எந்தப் பத்திரிக்கையானாலும் இண்டர்நெட் சைட்டானாலும், சினிமா பற்றி ஆர்வத்தோடு வாசிப்பேன்.

தமிழ் சினிமா இசை?
பாடல் கேட்பது ரொம்ப பிடிக்கும். +1, +2 படிக்கும் பொழுதெல்லாம் எஃப்க்ட்(effect),  எஃப்க்ட்-னு உளறிக்கிட்டு இருப்பேன். Home Theater செட் பண்ணலாம்னு இருந்தேன். அப்பறம் எங்க வீட்டு டிவிலயே woofer இருந்ததால் திட்டம் கைவிடப்பட்டு, ஒரு VCD cum MP3 Player வாங்கினோம். பாட்டு கேட்டுடே பாடம் படிப்பது நம்ம ஸ்டைல்.. ரஹ்மான் இசை ரொம்ப இஷ்டம்னாலும், யார் இசையமைத்த நல்ல பாடல்களும் கேட்பேன். இளையராஜாவின் இசையும் ரொம்ப பிடிக்கும். திருவாசகம் சிம்பொனி அருமையான இசைசார்ந்த ஆன்மீக அனுபவம். கார்திக் ராஜா நல்ல வருவார்னு இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஹாரிஸ், யுவன், பிரகாஷ்குமார், வித்யாசாகர் உள்ளிட்ட பலரையும் பிடிக்கும்.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
எப்பவாச்சும் நண்பர்கள் வற்புறுத்தினால் பார்ப்பேன். ஓம் சாந்தி ஓம், பொம்மரில்லு இவை இரண்டும் நான் மிகவும் ரசித்த படங்கள். மிகக்குறைவான ஆங்கிலப்படங்களே பார்த்திருந்தாலும், Behind the enemy lines I & II, Titanic ரொம்ப பிடிக்கும்.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சினிமா பார்ப்பது, சினிமா செய்திகள் படிப்பது,  நண்பர்களுடன் சினிமா பற்றி பேசுவது தவிர வேறு எந்தத் தொடர்பும் கிடையாது.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உலக சினிமா, யதார்த்த சினிமா, கமர்ஷியல் சினிமா என்று சண்டை போடாமல், அவரவர் கற்பனையையும், சமூகப்பொறுப்பும் கலந்து நல்ல படங்கள் வரவேண்டும். வருமானு தெரியல...

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நிறைய புத்தகம் படிக்கலாம். நண்பர்களுடன் கிரிக்கெட், வீடியோ கேம்ஸ் விளையாடலாம். பழைய படங்கள் பார்க்கலாம். ஜாலியா ஊர் சுற்றலாம். நாடகங்கள் பார்க்கலாம். ஒரு வருசம் சும்மா ஸல்லுனு ஓடிரும். மறுபடியும் படம் பார்க்க ஆரம்பிச்சிடலாம்.

திங்கள், 6 அக்டோபர், 2008

என்னுயிர் தோழி

நீ இல்லாத நாளை நினைக்கவும் இல்லை,
உன் பிரிவைத் தாங்கவும் தெம்பில்லை !

ஈன்றவனே தன் உரிமை விட்டுக்கொடுக்கும் போது
என் அற்ப மனம் தவிக்கின்றதே !

உன் நட்பெனும் புனித கங்கை
என் நெஞ்சம் தன்னை நனைக்கின்றதே !

உன் அன்பை நினைக்கையில்
என் கண்கள் ஆனந்தத்தில் பனிக்கின்றதே !

நம் நட்பின் நெருக்கம் குறைந்திடுமோவென்று
என் சிந்தை அஞ்சிப் பதறுகின்றதே !

அடுத்த ஜென்மத்திலாவது
என் மகளாய் நீ பிறந்திடு !

என் மனமே அதுவரை பொறுத்திரு !

வியாழன், 2 அக்டோபர், 2008

பாதச்சுவடு

கடற்கரை மணலில்
ஆயிரம் பாதச்சுவடுகள் இருந்தாலும்
உன் பாதச்சுவடுகளை 
என்னால் அடையாளம் காண முடியும் . . .

உன் பாதம்பட்டு
பூக்கும் பூக்களை
என் காதல் 
கண்டுபிடித்துவிடும் !

புதன், 1 அக்டோபர், 2008

வாழ்க்கைத்துணை

உன் மேல் 
அன்பு செலுத்தும்பொழுது 
நினைத்தேன்
”என் வாழ்க்கைக்கு நீயே துணை !”

உன் அன்பில் 
திளைக்கும் பொழுது
தெரிந்துகொண்டேன்
”என் வாழ்க்கையே 
உன்னோடு 
நான் வாழ துணை !”